Fx16TV Logo

குடிநீர் விநியோகம் செய்யக்கோரி ஊராட்சி ஒன்றிய முற்றுகை போராட்டம்

NEWS / தமிழ்நாடு, Fx16News, District,

குடிநீர் விநியோகம் செய்யக்கோரி சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம்

சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரம் ஊராட்சியில் மில்மேடு மற்றும் பெரியார்நகரில் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த இருகிராமங்களுக்கும் கடந்த 6 மாதகாலமாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை என கூறப்படுகிறது. மேலும் கிராமத்தில் உள்ள ஆழ்குழாய் கிணறு மின்மோட்டார் பழுது ஏற்பட்டுள்ளதால் மிகவும் சிரமத்திற்குள்ளான பொதுமக்கள் அக்கம்பக்கம் உள்ள விவசாய தோட்டங்களுக்கு சென்று குடிநீர் எடுத்துவந்து பயன்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து உக்கரம் ஊராட்சி அலுவலகத்திலும், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்காததால் 100 க்கும் மேற்பட்ட கிராமமக்கள் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து சீராக குடிநீர் விநியோகம் செய்யக்கோரி முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் மூர்த்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 2 நாட்களில் ஆற்றுகுடிநீர் சீராக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஒருவார காலத்தில் ஆழ்குழாய்கிணறு மின்மோட்டார் பழுது நீக்கம் செய்யப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். 2 நாட்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையெனில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கிராமமக்கள் தெரிவித்தனர்.

 

 

Fx16TV Logo