Fx16TV Logo

சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதியில் தடுப்பணைகளில் பட்டப்பகலில் மணல் கடத்தல்

NEWS / தமிழ்நாடு, Fx16News, District,

சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதியில் தடுப்பணைகளில் பட்டப்பகலில் மணல் கடத்தல்.  வருவாய்த்துறையினர் கண்டுகொள்ளாமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள தடுப்பணைகளில் பட்டப்பகலில் நடைபெறும் மணல் கடத்தலை வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள கிராமங்களில் மழைநீரை சேகரிக்க பல்வேறு பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெய்த மழைகாரணமாக தடுப்பணைகளில் தண்ணீர் நிரம்பியிருந்ததால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. இந்நிலையில் தற்போது கடுமையான வெயில் காரணமாக பெரும்பாலான தடுப்பணைகளில் தண்ணீர் வற்றியதால் அதிக அளவில் மணல் படிந்துள்ளது.

தடுப்பணைகளில் படிந்துள்ள மணலை மர்மநபர்கள் பட்டப்பகலில் அள்ளி டிராக்டரில் லோடு ஏற்றி விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.  பசுவனாபுரம் பகுதியில் உள்ள தடுப்பணை ஒன்றில் மணல் திருட்டில் மர்மநபர்கள் அதிக அளவில் ஈடுபட்டுள்ளனர். இரவு பகல் பாராமல் மணலை திருடி டிராக்டரில் பாரம் ஏற்றி ரு.4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை என விற்பனை செய்கின்றனர். இதுகுறித்து வருவாய்த்துறையினரிடம் தகவல் சொன்னாலும் விஏஓ, ஆர்ஐ உள்ளிட்ட எந்த அதிகாரிகளும் மணல் திருட்டை கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

மணல் திருட்டில் ஈடுபடுவோரிடம் கிராம மக்கள் கேட்டால் ஆளுங்கட்சியினரின் ஆதரவோடு மணல் அள்ளுவதாகவும் நீங்கள் எந்த அதிகாரிகளிடம் மணல் திருட்டு குறித்து தகவல் தெரிவித்தாலும் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் என சவால் விடுகின்றனர்.  ஆளுங்கட்சியினர் துணையோடு மணல் கடத்தப்படுவதால் பல தடுப்பணைகள் இருக்கும் சுவடு தெரியாமல் காணாமல் போய்விடும் என்பதால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் மணல் கடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடம்பூர் மலைப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Fx16TV Logo